“இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி தான்…” – டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரை!
Share
இந்த முறை ஆட்சி அமைக்கப் போவது இந்தியா கூட்டணி தானே தவிர மோடி அல்ல என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், டில்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “நான் தேர்தலுக்கு முன்பாக விரைவில் சிறையில் இருந்து வருவேன் என்று கூறினேன். அதன்படியே வந்துள்ளேன்.
கடவுளின் அருள் நம்முடன் உள்ளது. நமது கட்சி சிறிய கட்சி. மிகவும் இளமையான கட்சி. நம் தலைவர்கள் பலரை பாஜக சிறைக்கு அனுப்பினர். ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க நினைக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார். பிரதமரின் ஒரே குறிக்கோள் ‘ஒரு நாடு ஒரு தலைவர்’ என்பது தான். அதனால் தான் பிற கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறார். மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்யும் எதிர்க்கட்சிகளின் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை பாஜக அரசு செய்து வருகிறது. இம்முறை பாஜக 220 – 230 இடங்களில் மட்டுமே வெல்லும். ஆட்சி அமைக்கப்போவது இந்தியா கூட்டணி தானே தவிர நரேந்திர மோடி அல்ல.” இவ்வாறு அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.