LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய எம்எல்ஏவை பிடிக்க தனிப்படை!

Share

ஆந்திராவில் வாக்குப்பதிவு  இயந்திரத்தை சேதப்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான ராமகிருஷ்ண ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  மொத்தம் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிடைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே. 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மர்செர்லா தொகுதியின் வேட்பாளரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ண ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து அங்கிருந்த மின்வாக்குப்பதிவு இயந்திரத்தை ராமகிருஷ்ண ரெட்டி சேதப்படுத்தியுள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதுமட்டுமின்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் பல வாக்குச்சாவடி மையங்களில் இருந்த மின்வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து எம்எல்ஏ மீது குற்றவழக்குப் பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால் அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் தேடி வருகின்றனர். வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ராமகிருஷ்ண ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான எம்எல்ஏவைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர காவல் துறை தெரிவித்துள்ளது.