தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றி
Share
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக நடந்து வரும் சூழலில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 7 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அவர் பேசும்போது, தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாசிச கொள்கையை வீழ்த்தி, இந்தியாவை காப்போம் என்று செயல்பட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 என்ற அளவில் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
ஆட்சியை பிடிக்க முடியும் அளவுக்கு பெரும்பான்மையை பெற முடியாமல் பா.ஜ.க. தள்ளப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வின் பணபலம் இந்த தேர்தலில் எடுபடவில்லை. அதனை உடைத்து எறிந்துள்ளோம்.
இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றை பாதுகாக்க தி.மு.க. தொடர்ந்து பணியாற்றும். தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் கனவு பலிக்கவில்லை. தமிழகத்தில் தாமரை மலரும், மலரும் என கூறினார்கள். ஆனால், மலராமலேயே போய் விட்டது என்று பேசியுள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் பற்றிய கேள்விக்கு அவர், என்னுடைய உயரம் எனக்கு தெரியும் என்று பதிலளித்து உள்ளார்.
தமிழக மக்கள் 40-க்கு 40 என வெற்றியை வழங்கி உள்ளனர். ஒடிசாவில் தமிழர்களை மோடி இழிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள மோடி எதிர்ப்பு முழுமையாக வெளிப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், மோடி எதிர்ப்பலை பல மாநிலங்களில் உள்ளது என்றும் கூறியுள்ளார். டெல்லியில் நாளை நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.