LOADING

Type to search

இந்திய அரசியல்

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கையா? – சத்யபிரதா சாகு விளக்கம்!

Share

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளருமான விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் சுமார் 4,379 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு தொடர்ந்து டப் கொடுத்து வந்தது அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, திட்டமிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், எப்படியோ, விஜயபிரபாகரனை சூழ்ச்சி செய்து வீழ்த்தி விட்டதாகவும், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுவதே முறை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரிலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு பதிவான வாக்குகள் ஈ.வி.எம்.இயந்திரங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.