LOADING

Type to search

உலக அரசியல்

ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் வலதுசாரி கட்சி எழுச்சி… முன்கூட்டியே தேர்தலை அறிவித்த பிரான்ஸ் அதிபர்

Share

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும், மரீன் லி பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

தேசிய பேரணி 32 சதவீத வாக்குகளும், மேக்ரானின் கட்சி 15 சதவீத வாக்குகளும், சோசலிஸ்டுகள் 14 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்பு உள்ளதாக முதல் கருத்துக் கணிப்பு தெரிவித்தது. தீவிர வலதுசாரித் தலைவரான மரீன் லு பென், ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை. அவரது கட்சி பிரான்சில் நடைபெற்ற வாக்கெடுப்பில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். “ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எனது அரசாங்கத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த தேர்தல் முடிவை புறக்கணிப்பது போல் நடிக்க முடியாது. எனவே, நாடாளுமன்ற கீழ்சபை தேர்தல்கள் ஜூன் 30ஆம் தேதி நடத்தப்படும். ஜூலை 7ஆம் தேதி இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் நாடு செயல்பட தெளிவான பெரும்பான்மை தேவை. தீவிர வலதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் முன்னேறி வருகின்றன. என்னால் ராஜினாமா செய்ய முடியாத நிலை உள்ளது” என்றும் இம்மானுவேல் மேக்ரான் கூறினார். மேக்ரானின் இந்த அதிரடி அறிவிப்புக்குப் பிறகு தேசிய பேரணி கட்சியின் தலைவர் லி பென் கூறுகையில், வரவிருக்கும் தேசியத் தேர்தலில் பிரான்ஸ் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தால் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறோம் என்றார்.