LOADING

Type to search

இந்திய அரசியல்

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை – ரூ.1 கோடி அபராதம்

Share

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதுபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, எப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதேபோல சமீபத்தில் பல்வேறு நகரங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து, தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அரசுத் தேர்வுகள் மசோதா 2024 வழி வகுக்கிறது. இந்த மசோதாவின் படி அந்த தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.