கைலாசா நாடு குறித்து 21-ம் தேதி அறிவிப்பு – நித்தியானந்தா தகவல்
Share
சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த 2019-ம் ஆண்டு நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த நாட்டுக்கென தனி கடப்பிதழ், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி இது – தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர். அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்து உள்ளதாக கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பபரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்தியானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டிவந்தனர். இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ந்தேதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21- ந்தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.