பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
Share
பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கீர் ஸ்டாமர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கீர் ஸ்டாமருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கீர் ஸ்டாமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர். இரு நாடுகளும் பலனடையும் இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த விரைந்து பணியாற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டிய இருவரும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர் என தெரிவித்துள்ளது.