பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி
Share
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஐரோப்பாவில் நடைபெறும் முக்கிய தேர்தலாகும். நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் பிரண்ட் கூட்டணி போட்டியிட்டன. இந்நிலையில், இறுதி கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் இடதுசாரி முன்னணி கூட்டணி அதிக இடங்களில் (182 இடங்கள்) வெற்றி பெற்றுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தில் (168 இடங்களில் வெற்றி) உள்ளது. வலதுசாரி கூட்டணி 3வது இடத்துக்கு (143 இடங்கள்) தள்ளப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி 45 இடங்களையும், மற்ற கட்சிகள் இணைந்து 39 இடங்களையும் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 289 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழலில், இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை இதனிடையே இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் இமானுவேல் மேக்ரானின் செண்ட்ரிஸ்ட் கட்சி புதிய கூட்டணி அரசை அமைக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியேல் அட்டல் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்பதை தொடர்ந்து அவர் இந்த முடிவை அறிவித்தார்.