“ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை” – ப.சிதம்பரம் கண்டனம்!
Share
அரசியல் படுகொலைகள் குறித்த பாஜக தலைவர் அமித் மால்வியாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக தகவல் தொடர்புப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் (ஜோ பைடன் தரப்பு) எவ்வாறு டொனால்டு டிரம்புக்கு எதிரான விமர்சனஙகளை முன்வைக்கின்றனரோ, அதுபோல இந்தியாவில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர் என பேசியிருந்தார். மேலும் “தங்கள் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதை அடிக்கடி நினைவுகூறும் காங்கிரஸூக்கு, காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் எடுத்த அரசியல் முடிவுகளுக்காகவே கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்” எனவும் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “அமித் மால்வியாவின் கருத்து, அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அவர்கள் எடுத்த அரசியல் படுகொலை செய்யப்பட்டார்கள் என அவர் கூறுவதன் அர்த்தம் என்ன? அவரின் இந்தக் கூற்றை வன்மையாக கண்டிக்கிறேன். இழிவான வகையில் பேசியுள்ள மால்வியாவின் கருத்தை பாஜக தலைவர்கள் ஆதரிக்கின்றனரா? இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது படுகொலைகள் பயங்கரவாத சித்தாந்தங்களால், பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை. அரசியல் தீர்மானங்கள் சரியா? தவறா? என்பது அரசியல் விவாதங்கள், ஆலோசனைகள் மூலம் தீர்மானிக்கப்படவும், நிராகரிக்கப்படவும் வேண்டும். படுகொலைகளை அரசியல் தீர்மானத்திற்கான் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. மாளவியா தனது கூற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.