தூத்துக்குடி தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு.. 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Share
தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிந்ததில் 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியபுரத்தில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் மீன்களை பதப்படுத்தி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தனியார் தொழிற்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் மின்கசிவு காரணமாக அம்மோனியா சிலிண்டர் கசிந்து ஆலையில் அம்மோனியா வாயு பரவியதாக கூறப்படுகிறது. இதனால், அப்போது வேலை செய்து கொண்டிருந்த பெண்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தொழிற்சாலை வாகனம் மற்றும் அவசர ஊர்தி உதவியுடன் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக கும்பகோணத்தைச் சேர்ந்த 5 பெண்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் உள்பட 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் 29 பேர் மற்றும் தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட மொத்தம் 30 பேர் அம்மோனியா வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கசிவு விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.