LOADING

Type to search

உலக அரசியல்

கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு!

Share

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவ.5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால், போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். மேலும், கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம் சிகாகோவில் நடக்க உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

இதனிடையே கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் அதிபர் பரக் ஒபாமா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இது தொடர்பாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், டொனால்டு டிரம்பை, கமலா ஹாரிசால் வெற்றி கொள்ள முடியாது என்று, பரக் ஒபாமா நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இக்கருத்துகளை உடைக்கும் விதமாக பராக் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வாரம், நானும், மிச்சலும், எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நாட்டின் முக்கியமான இந்த தருணத்தில், நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பராக் ஒபாமா கூறியுள்ளார்.