மதுபான கொள்கை ஊழல்: கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
Share
டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டில்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ கைது காரணமாக தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் மீது டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தனது விசாரணைகளை முடித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.