வயநாடு நிலச்சரிவு: பார்க்கப் பார்க்கப் பதற்றம் – கவிஞர் வைரமுத்து உருக்கம்
Share
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது. கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம். இருந்த வீடுகளே இடுகாடுகளானதில் இந்திய வரைபடத்திலிருந்தே சில கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன.
அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை. பிணமாகிப் போனவர்களின் கடைசிநேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது. மனிதனுக்கு எதிராக இயற்கை போர்தொடுத்தது என்றும் சொல்லலாம். இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்த போரின் பின்விளைவு என்றும் சொல்லலாம். மலைகளை மழித்தல், காடுகளை அழித்தல், நதிகளைக் கெடுத்தல் எல்லாம் கூடி மனிதர்களைப் பழிவாங்கியிருக்கின்றன. புவி வெப்பத்தால் பைத்தியம் பிடித்த வானிலை, இன்னும் இதுபோல் செய்யக்கூடும். மனிதர்களும் அரசுகளும் விழிப்போடிருத்தல் வேண்டும். மூச்சுக் குழாயில் மண் விழுந்து போனவர்க்கெல்லாம் என் கண்விழுந்த கண்ணீரில் அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.