ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்!
Share
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை செப். 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் காவல்துறை தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன. ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணையில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை அண்மையில் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை காவல்துறை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியதில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் உறவினர் வீட்டில் பொற்கொடி பதுங்கியிருந்த நிலையில் காவல்துறை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு முழுவதும் நடைபெற்றதாக தெரிகிறது. இதுதொடர்பான காவல்துறை விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப். 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.