“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Share
அடுத்த தலைமுறையினர் அனைவரும், வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதிகாரம், அரசியல் என எல்லாவற்றிலும் உயர்ந்துவரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’ சார்பில், மகளிருக்கான கருத்தரங்க நிகழ்ச்சி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “அடிமட்ட உழைப்பாளிகளுக்காக பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருகிறார். உலக நாடுகளில் முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துக் கொண்டிருக்கக் கூடிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. 2047 இல் இந்தியா மைல்கல் சாதனையை படைக்க உள்ளது.
அடுத்த தலைமுறையினரின் முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக பெண்களின் வளர்ச்சியிலும், பெண்களின் முன்னேற்றத்திலும் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவின் ஜி20 மாநாட்டில் உலகின் முக்கிய 20 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவில் எல்லா வகையான பொதுமக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் டிஜிட்டல் மயம் பெரிய அளவில் உறுதுணையாக இருந்துள்ளது. மத்திய அரசு பெண்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை செய்து வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம், படித்தவர், படிக்காதவர் என எந்த பாகுபாடும் இன்றி பெண்களின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்து வருகிறது. நாம், நமது மகன்கள், நமது பேரன்கள் என நமது அடுத்த தலைமுறையினர் அனைவரும் வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.