LOADING

Type to search

இந்திய அரசியல்

அரைத்த மாவையே அரைப்பதுபோல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

Share

புதுக்கோட்டை மாவட்டம், முத்துபேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “பாஜக உடன் கூட்டணி குறித்த கருத்தை நான் ஏற்கனவே விரிவாக அறிவித்து விட்டேன். பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவது, அரைத்த மாவை அரைப்பது போல் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. திறமையற்ற ஒரு முதலமைச்சராக முக ஸ்டாலின் இருந்து வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தோம். ஆனால், இந்த திமுக ஆட்சிக்காலத்தில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படை தன்மையாக இல்லை.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டார். இப்போது நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டால் அது மரபு இல்லை என்கிறார். நிச்சயமாக தமிழக அரசு தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நடக்கப் போகின்ற உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. நாட்டில் யார் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் ஜனநாயக உரிமை உள்ளது. மாநாடு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டாலும் அனுமதி கொடுப்பது மரபு. எங்களுடைய ஆட்சி காலத்தில் கூட எல்லா கட்சிகளுக்கும் மாநாடு நடத்த அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு திமுக அரசு அனுமதி கொடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.