ராகுல் காந்திக்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் நடத்தினார்கள்
Share
அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, அங்கு உரையாற்றியிருந்தார். ஆனால் அவர் பேசியது தங்களுக்கு எதிராக இருந்ததாக கூறி, சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு சீக்கியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றுவது வழக்கம். இப்படி பேசும்போது மத்திய அரசு குறித்து கூர்மையான விமர்சனங்களை அடுக்குவார். இதற்கு, “இந்தியாவை ராகுல் அவமதித்துவிட்டார்” என மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் சாடுவார்கள்.
தற்போதும் இதே சம்பவம்தான் நடந்திருக்கிறது. அதாவது, ராகுல் காந்தி மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு வாஷிங்டன் டிசியில் உரையாற்றியிருந்தார். இந்த நிகழ்வின்போது, மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்ற ராகுல், ஒரு கட்டத்தில் எதிரில் இருந்த சீக்கரை பார்த்து, “இந்த பிரச்னை, இந்தியாவில் நீங்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவீர்களா? காப்பு அணிய அனுமதிக்கப்படுவீர்களா? குருத்துவாரா செல்ல அனுமதிக்கப்படுவீர்களா? என்பதை பற்றியது. இப்போராட்டம் அனைத்து மதத்தவருக்குமானது” என்று கூறியிருந்தார்.
ராகுல் காந்தி இப்படி பேசியது ரொம்ப தப்பு. நாங்க, பாஜக ஆட்சியில்தான் நிம்மதியா இருக்கிறோம் என்று கூறி, சீக்கியர்கள் சிலர் ராகுலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் சோனியா காந்தியின் வீட்டின் அருகில், ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மறுபுறம் ராகுல் கருத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “ராகுல் காந்தி குடும்பத்தினர் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சீக்கியர்கள் கருதினர். கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது அப்பாவி சீக்கியர்கள் 3,000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது வீடுகளில் இருந்த சீக்கியர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டனர். வெளிநாடுகளில் பதற்றத்துக்கு ரிய விவகாரங்களைப் பேசி ஆபத்தான கதைகளை உருவாக்க ராகுல் முயற்சிக்கிறார்” என்று விமர்சித்திருந்தார்.
அமெரிக்கா பயணத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்தும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, “இந்தியாவில் நடப்பது கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் அல்ல. அது மேலோட்டமான கருத்து. இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகங்களை தரம்தாழ்ந்தவையாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.
தமிழ், மராத்தி, வங்கம், மணிப்பூரி மொழிகளை ஆர்எஸ்எஸ் தரம்தாழ்ந்தவையாகக் கருதுகிறது. இதற்கு எதிராகவும், அனைத்து மதத்தினருக்கும் அவரவர் உரிமைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மோதல் நடைபெறுகிறது. பிரதமா் உருவாக்கிய அச்சம் மாயமானது: இந்தியாவில் பிரதமா் மோடி உருவாக்கிய அச்சம் மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் மாயமானது. அந்த அச்சத்தை விதைக்க பல ஆண்டுகளானது. அதில் நிறைய திட்டமிடல் மற்றும் பணம் சம்பந்தப்பட்டிருந்தது.
ஆனால் நொடிப்பொழுதில் அந்த அச்சம் காற்றில் கரைந்தது. பல ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தபோது அரசியல் ரீதியாக இன்னல்களையோ, சிக்கல்களையோ சந்திக்காத மோடி, பின்னர் நாட்டின் பிரதமரானார். தற்போது அவா் மனதளவில் நிலைகுலைந்துள்ளார்” என்று கூறியிருந்தார்.