குற்ற வழக்குகளில் கைதானோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்காலத்தடை
Share
உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன்மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பிஆர் கவாய், கேவி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு அறிக்கை வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும் பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் ஏன் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.