27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா
Share
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போதும் ஒரு சில நாடுகளில் கொரோனா அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக எக்ஸ்இசி வேரியண்ட் என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது. அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.