‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன்னி லியோனை புகழ்ந்த பிரபுதேவா!
Share
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபுதேவா, ”இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது. இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன்.
அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார். நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாலிவுட் நடிகர் சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் ‘பேட்ட ராப் ‘ படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார். இந்தப் படத்தில் இயக்குநரும், கதாசிரியர் தினிலும் இணைந்து உருவாக்கிய திரைக்கதை எனக்கு பிடித்திருந்தது. நான் லீனியர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும். தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன். நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். செப்டம்பர் 27ஆம் தேதியன்று ‘பேட்ட ராப்’ வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.