LOADING

Type to search

இந்திய அரசியல்

தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்காக கவிஞர் மு.முருகேஷூக்கு ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.

Share

சென்னை. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து பங்களிப்பு ஆற்றிவரும் கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் கடந்த செப்.23 அன்று நடைபெற்ற விழாவில் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டினையொட்டி ‘கவிதை உறவு’ மாத இதழும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சென்னை ராணி சீதை மன்றத்தில் நடத்திய விழாவில், தமிழ் இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்த 100 படைப்பாளர்களுக்கு கலைஞர் விருதினை வழங்கி கவுரவித்தது.

விழாவிற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியே வி.ஜி.சந்தோசம் தலைமையேற்றார். கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், மருத்துவர் ஜெயராஜமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விருது விழாவில் தமிழில் கவிதை, கட்டுரை ஆகியவற்றோடு சிறுவர் இலக்கியம், ஹைக்கூ கவிதைகளில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் கவிஞர் மு.முருகேஷுக்கு, தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘கலைஞர் விருதினை’ வழங்கிச் சிறப்பித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து, தற்போது வந்தவாசியில் வசித்துவரும் கவிஞர் மு.முருகேஷ், முதுகலை தமிழ் படித்து, இளமுனைவர் பட்ட ஆய்வும் முடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வரும் இவர், இதுவரை 10 புதுக்கவிதை, 11 ஹைக்கூ கவிதை, 22 குழந்தை இலக்கியம், 10 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் என 54 நூல்களை எழுதியுள்ளார்.

இலங்கை, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். 2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ‘பால சாகித்திய புரஸ்கார் விருதினை’ ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்காகப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.