அமெரிக்கா – இஸ்ரேல் உறவு மேலும் வலுவடைய ‘நான் அதிபராக பதவியேற்க வேண்டும்’ – டிரம்ப்
Share
அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், “அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் வலுவடையும். பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன். இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவில் இருக்கும் யூத சமூகத்தினரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவப்படை அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.