LOADING

Type to search

இந்திய அரசியல்

சர்ச்சைகளுக்கிடையேயும் விற்பனையில் சூடுபிடித்த திருப்பதி லட்டு

Share

திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே திருப்பதியில் நடைபெற்ற பிரம்மற்சோவத்தின்போது லட்சக் கணக்கில் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள வருகை புரிகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை ஏராளமான மக்கள் தரிசிக்கிறார்கள். திருப்பதி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கி நேற்று வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இதில் இரண்டாவது லட்டு 175 கிராம் எடையில் தயார் செய்யப்படுகிறது. இந்த இரண்டாவது லட்டு பக்தர்கள் அனைவரும் விரும்பும் பெரிய லட்டாகும்.

இந்த லட்டுகள் ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இந்த லட்டு பிரசாதத்தை பெறுவதற்கு தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக கவுண்ட்டர்கள் உள்ளன. ரூ. 10, ரூ. 50, ரூ. 200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், ஆதார் கார்டு ஒன்றுக்கு 2 லட்டுகளை வாங்கிச் செல்லலாம், சுவாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என்றும் அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், லட்டு கவுண்ட்டர்களில் பிரத்யேக இயந்திரங்கள் வைக்கப்பட்டு ஸ்கேனிங் மூலம், பக்தர்களுக்கு லட்டு வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் கியூவில் நின்று லட்டுகளைப் பெறுவது தவிர்க்கப்படுவதோடு, விரைவாகவும் லட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, திருப்பதியில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதமிருந்து பரிகாரம் செய்தார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பூதாகரமாக வெடித்தது. லட்டு சர்ச்சைக்கு மத்தியில், திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில், 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. விழாவில், மலையப்ப சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடப்பு ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற கருடசேவை தரிசனத்தைக் காண்பதற்காக 3.5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், திருமலை திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானது. கடந்த ஆண்டும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பக்தர்கள் உண்டியல் 26 கோடி ரூபாயை காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ரூ. 2 கோடி அதிகமாகும். 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரம்மோற்சவ நிகழ்ச்சியையொட்டி, பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 மருத்துவர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.