கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி சொந்த ஊரில் சிறப்பு பூஜை
Share
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம்தான் கமலா ஹாரீஸின் சொந்த ஊராகும்.. இந்த கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் – ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா. பின்னர், அரசு வேலை கிடைத்ததையடுத்து கோபால் ஐயர் குடும்பத்துடன் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு வெளியூர் சென்று விட்டார். தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறிவிட்டனர். கோபால் ஐயர் சென்னையில் வசித்த போது, மகள் சியமளா அமெரிக்காவில் சட்டம் படிக்க சென்றார். அங்கு உடன் படித்த டொனால்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இதற்கு இடையே, டொனால்டை சியமளா விவகாரத்து செய்தார். இதில், கமலா, தனது தாயார் சியமளா போல், அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார். தற்போது , அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இன்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். இந்த நிலையில், கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தாய் வழி குடும்ப குலதெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.