ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? – திருமாவளவன் விளக்கம்
Share
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கும். இனி யாருடன் கூட்டணி என்று எங்களிடம் கேட்காதீர்கள் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: கட்சி, கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்வை. ஏற்கனவே நாங்கள் தொடர்ந்து 7 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் வெற்றிகரமாக இருக்கிறோம். அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளோம். இந்த இரண்டு கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு பங்கு உள்ளது. எனவே நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், அதை வெற்றிகரமாக முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கிறது.
இந்த கூட்டணியை விட்டுவிட்டு, வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். வேண்டும் என்றே, திட்டமிட்டே விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு எங்கிருந்து எழுந்தது. யாரோ எவரோ போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி, சந்தேகத்தை எழுப்புவது ஏற்புடையது அல்ல. அதை 100 விழுக்காடு நான் மறுக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில் தான் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.