கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
Share
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விசாரணையின்போது பதிலளித்த தமிழ்நாடு அரசு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஆலோசனைகள் வழங்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், அனைத்து விசாரணை ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும், சிபிஐ விசாரணைக்கு காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.