LOADING

Type to search

இந்திய அரசியல்

அதானியுடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பா? – அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

Share

கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி எண்டர்பிரைசஸ் 19 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. இதைத் தொடர்ந்து அதானி விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது; “தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. “சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா” என்பது மத்திய அரசின் நிறுவனம்.

இந்த நிறுவனத்தோடு தமிழ்நாடு மின்சார வாரியம் 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில், அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதானி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.