டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்- மு.க.ஸ்டாலின்
Share
தமிழக சட்டசபையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன் மீது அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி: டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடப்பட்டு 10 மாத காலம் நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: டங்ஸ்டன் சுரங்க அனுமதியை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் இதை கடுமையாக எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி மதுரை பகுதியில் இந்த சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அமைச்சர் மூர்த்தி அவர்களை பார்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்தி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் கடிதம் எப்போது எழுதினீர்கள். பிரச்சினை வந்த பிறகு இப்போது தானே எழுதி இருக்கிறீர்கள். இது மக்கள் பிரச்சினை. நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் எதுவும் சொல்லக்கூடாதா? அப்ப டியே தலையாட்டி விட்டு போக வேண்டுமா? சுரங்க ஏலம் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அதைத் தான் நான் கேட்கிறேன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: நாடாளுமன்றத்தில் எங்கள் எம்.பி.க்கள் இதை எதிர்த்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். தெரியவில்லை என்று சொன்னால் எப்படி? நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: சுரங்க ஏலம் வரும் போது ஒப்பந்தம் போடப்பட்டு 10 மாத காலம் என்ன செய்தீர்கள்? அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: நாடாளுமன்ற அவையை ஒத்தி வைக்கிற அளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். பாராளுமன்றம் இப்போது தொடர்ந்து நடக்கவில்லை. கிடைக்கிற நேரத்தை பயன்படுத்தி பேசி இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தரப்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, உங்களின் பார்வையில் நாங்கள் சுரங்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக தெரியலாம். ஆனால் அது போன்று நாங்கள் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. எங்களது எதிர்ப்பை கடுமையாகவே பதிவு செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். திரும்ப திரும்ப தெளிவாக சொல்கிறேன். நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன். எனவே இந்த தீர்மானத்துக்கு நீங்கள் (அ.தி.மு.க.) ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. பொறுத்துக் கொள்ளாது. எனவே இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்றார்.