பரமக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ள நீர் – மக்கள் அவதி
Share
பரமக்குடியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் பரமக்குடியில் இருந்து காட்டு பரமக்குடி, பாம்பு விழுந்தான், அண்டக்குடி, வேந்தோணி போன்ற கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பொதுப் பணித்துறையினரின் அலட்சியத்தால் முறையாக குடிமராமத்து பணிகள் செய்யாததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் காட்டு பரமக்குடி, வேந்தோணி, புதுநகர் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றியதால் சோமநாதபுரத்தில் உள்ள அன்பு நகர், ஆண்டாள் நகர் போன்ற டிடிசி அப்ரூவல் பெற்ற குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் இடுப்பளவு தேங்கியுள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள் வேறு இடத்திற்கு குடிபெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தண்ணீர் வடியாமல் நீண்ட நாட்களுக்கு மேல் தேங்கி நிற்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்ரமணியனை பொதுமக்கள் தொடர்பு கொண்ட போது என்னால் எதுவும் செய்ய முடியாது என அலட்சியமாக கூறி உள்ளார். மேலும் தாசில்தார், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரமக்குடி கண்மாயை முறையாக தூர்வார வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.