“திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு” – முதலமைச்சர் ஸ்டாலின்
Share
தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 சட்மன்ற தேர்தலில் 200 இல்லை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். 2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி” என்றார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2026-ல் வெற்றி நமதே” என்றார்.