ராமதாஸ் -அன்புமணி கடும் மோதல் – பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்
Share
புதுச்சேரியில் நடந்த பா.ம.க. சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க., தலைவர் அன்புமணி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார். ‘கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு’ என அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். இதற்கு டென்ஷனான, ராமதாஸ், ‘நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ” என கூறினார். அதுமட்டுமின்றி, ‘நான் உருவாக்கிய கட்சி’ என்று ராமதாஸ் 3 முறை திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு குறுக்கே, ‘நீங்கள் சொல்லுங்கள். பண்ணுங்கள் என்று அன்புமணி பதில் அளித்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி, ‘பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம்’ என்று அறிவித்துள்ளார்.
சிறப்பு பொதுக்குழுவில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக அரசு, 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத்தை உடனடியாக தர வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.