பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம்
Share
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.