LOADING

Type to search

இந்திய அரசியல்

விருது கிடைத்த ரூ.10 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து அரசுக்கே திருப்பி கொடுத்தவர் நல்லகண்ணு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Share

நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை என்று நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார். மேலும் நல்லகண்ணுவின் தியாகங்களை உள்ளடக்கிய சிறப்புப் பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இந்த விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “100 வயதை கடந்த நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார்.

நான் இங்கு வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன். பெரியாருக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. கருணாநிதி இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கினேன். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கருணாநிதி குறிப்பிட்டார். நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை. அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை. தகைசால் தமிழர் விருதுக்கு கொடுத்த ரூ.10 லட்சத்தில் இன்னும் 10 ஆயிரத்தை சேர்த்து தமிழக அரசுக்கே அவர் கொடுத்தார். கட்சிக்காகவே உழைத்தார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட் உடனான நட்பு தேர்தல் அரசியலைத் தாண்டிய கொள்கை நட்பு.

திமுக உருவாகவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்திருப்பேன் என்று கருணாநிதி கூறினார். இயக்கம் வேறு, தான் வேறு என்று பார்க்காமல் உழைத்தவர். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு. ஒரு இயக்கமும் அதன் மூத்த தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றனர். மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய தேர்தல் அறிக்கையை மொழிப் பெயர்த்து எழுதியவர் பெரியார். திராவிட கட்சியில் இல்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கூறினார் கருணாநிதி. இவ்வளவு பேசும் என் பெயர் கூட ஸ்டாலின் தான். இரு இயக்கங்களுக்குமான கொள்கை நட்பு. தேர்தல், அரசியலை தாண்டிய நட்பு. சாதியவாதம், வகுப்புவாதம் பெரும்பான்மைவாதம் ஆகிய அனைத்திற்கும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தான் நல்லக்கண்ணுவிற்கு நாம் வழங்கும் நூற்றாண்டு பரிசாக அமையும். நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு பல்லாண்டு வாழ்க” இவ்வாறு தெரிவித்தார்.