புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்திற்கு ப.சிதம்பரம் பாராட்டு
Share
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார். இத்திட்டங்களுள் புதுமைப் பெண் திட்டம் 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இத்திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ‘புதுமைப் பெண்’ திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று முதலமைச்சரைப் பாராட்டுகிறேன். உயர் கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன் பெறுவார்கள் என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முடிவு பல பயன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை என பதிவிட்டுள்ளார்.