LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உடன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உள்ளனர்.