‘புதுமைப்பெண்‘ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார். அப்போது தூத்துக்குடியில் ரூ.32 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.