பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் – ஸ்டாலின்
Share
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு: 2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது. 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும். கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.
பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும். சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம். தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.