LOADING

Type to search

சினிமா

லப்பர் பந்து தினேஷ் உடன் பணியாற்ற வேண்டும் – இயக்குநர் ஷங்கர்

Share

தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 20-க்கும் குறைவான படங்களில் ஒன்று “லப்பர் பந்து.” இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியிலும் ஹிட் அடித்தது. லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் நடித்து இருந்தனர். இதில் அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் பூமாலை (கெத்து தினேஷ்) என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் முன்னணி இயக்குநர் ஷங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷ் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், அவருடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசும் போது, “லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இப்படியொரு நடிப்பை நான் யாரிடத்திலும் பார்க்கவில்லை. எந்த சாயலும் இல்லாத நடிப்பாக இருந்தது. அது நடிப்பு போன்றே தெரியவில்லை. எப்படி அவர் இதை செய்தார் என்கிற மாதிரி இருந்தது. தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் அவர். தினேஷுக்கு பாராட்டுக்கள். அவருடன் பணியாற்ற வேண்டும்,” என்று தெரிவித்தார்.