இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Share
ஹமாசுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இதில் ஹமாசுக்கு ஆதரவாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இணைந்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தின. தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படியே நேற்று இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணைகளை வீசி தாக்கினர். இஸ்ரேலின் ஏவுகணை இடைமறிப்பு அமைப்பால் இதை தடுக்க முடியவில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். 12 மணி நேரத்தில் நடந்த 3-வது தாக்குதல் இதுவாகும். முன்னதாக மேலும் 2 முறை மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹவுதி அறிவித்தது. இஸ்ரேலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.