“மகளிருக்கு மாதம் ரூ. 2,500… இலவச எரிவாயு உருளை” – தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக
Share
டில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும், பாஜகவும் கடுமையாக தேர்தல் வேலையை செய்துவருகின்றன.
தேர்தலில் போட்டிடும் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்தார். தொடர்ந்து பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்த சூழலில் அவர் பேசியதாவது, “ஏழைக் குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறு ஊட்டச்சத்துப் பெட்டகங்களும், 21,000 ரூபாயும் வழங்கப்படும். மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும். இது சட்டமன்றத் தேர்தல் முடிந்து நடக்கும் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும். டில்லியில் ஆட்சி அமைத்ததும், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே டில்லி மக்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இது ஏற்கனவே டெல்லியில் இருக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுடன் சேர்த்து வழங்கப்படும். எனவே மொத்தம் ரூ. 10 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். 60 முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாத பென்ஷனான 2,000 ரூபாயை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 70 வயதுக்கு மேலான மிக மூத்த குடிமக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையான ரூ. 2,500 என்பதை ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கடந்த 4 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு வகைகள் உள்ளிட்டவை 80 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பாஜக அரசு அந்த மாநிலங்களில் ரூ. 5-க்கு முழு உணவு வழங்கிவருகிறது. அதேபோல், டில்லியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரூ. 5-க்கு முழு உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அடல் கேண்டீன் எனும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம்” இவ்வாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாதெரிவித்தார்.