ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
Share
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 7-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 10, 13, 17-ந் தேதிகளில் 3 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து 20-ந் தேதி நள்ளிரவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இதனிடையே பரபரப்பாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மொத்தம் 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய 97 வகையான பொருட்களும் இன்று காலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.