மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கையை பாஜக அரசு மறைகிறது – அகிலேஷ்
Share
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் என சமாஜ்வாதி தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முதல் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய மக்களவை கூட்டத்தில் அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய அகிலேஷ், அரசு தொடர்ந்து பட்ஜெட் புள்ளிவிவரங்களை வழங்கி வரும் அதே வேளையில், மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களையும் தயவுசெய்து கொடுங்கள். மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மகா கும்பமேளா பேரிடர் மேலாண்மை மற்றும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கும் மையத்தின் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், மருத்துவர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து ஆகிய புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மகா கும்பமேளா துயரத்திற்கு, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரட்டை எஞ்சின் அரசாங்கம்[பாஜக] மீது எந்த குற்றமும் இல்லை என்றால், புள்ளிவிவரங்கள் ஏன் மறைக்கப்பட்டன, அழிக்கப்பட்டன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.