டில்லி முதல் அமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா
Share

டில்லி முதல் அமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
70 தொகுதிகள் கொண்ட டில்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவித்தன. அதன்படி பா.ஜனதா 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. இந்த வரலாற்று வெற்றி மூலம் பா.ஜனதா தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
இதையடுத்து டில்லியின் புதிய முதல்-அமைச்சர் தேர்வு செய்ய, கட்சியின் மாநில தலைவரான வீரேந்திர சச்தேவா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். முதல்-அமைச்சர் பட்டியலில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா, ரேகா குப்தா, முன்னாள் முதல்-அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோர் உள்பட பல்வேறு பெயர்கள் இருந்தது. இதனிடையே பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றதால் அவர் வந்த பின்னர் புதிய முதல்-அமைச்சர் பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு டில்லி திரும்பியதும் டில்லி மாநில தலைவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவரான மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் டில்லி ராம்லீலா மைதானத்தில் பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டில்லி முதல் அமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றார். அவருக்கு டில்லி துணை நிலை ஆளுனர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் அமைச்சருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.