அமெரிக்காவின் தனியார் நிறுவன விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை
Share

விண்வெளி ஆராய்ச்சில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக பூமியின் ஒரே துணைக்கோளான நிலவை ஆய்வு செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்பி வருகின்றன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளன. இதற்கிடையே தனியார் நிறுவனங்களும் நிலவில் இறங்கி பரிசோதனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ‘பயர்பிளை ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் கடந்த ஜனவரி 15-ந் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.’புளூ கோஸ்ட்’ என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது. நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது. தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும்.