தொகுதி மறுவரையறை விவகாரம்: தி.மு.க.விற்கு கர்நாடக முதல் – அமைச்சர் சித்தராமையா ஆதரவு
Share

2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என தி.மு.க. கூறி வருகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க.விற்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாநிலங்களவை எம்.பி. முகமது அப்துல்லா இஸ்மாயில் ஆகியோர் சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. தலைவர்கள் குழுவுடனான சந்திப்பின்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக சித்தராமையா கண்டனம் தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்களின் எதிர்ப்பு குரலை ஒற்றுமையாக வெளிப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாகவும், இதற்கு சித்தராமையா தனது ஆதரவை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து சித்தராமையாவிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.