புதினுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை – அமெரிக்க அதிபர் டிரம்ப்
Share

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி அவர் நேற்று கூறும்போது, ரஷிய அதிபர் புதினுடன் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டேன் என்றும் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இறுதியாக முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். இதுபற்றி ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ஆயிரக்கணக்கான உக்ரைனிய படை வீரர்களை ரஷிய ராணுவம் சுற்றி வளைத்து உள்ளது.
அவர்களை உயிருடன் விட்டு விடுங்கள் என ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தி கேட்டு கொண்டேன். அப்படி இல்லையென்றால், 2-ம் உலக போருக்கு பின்னர் யாரும் பார்க்காத வகையில், இது கொடூர இனப்படுகொலையாகி விடும். கடவுள் அவர்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்து உள்ளார். இதற்கு முன் புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க தயார். எனினும், இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஆனது, நீண்டகால அமைதியை இலக்காக கொண்டிருக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கான மூலகாரணம் என்னவென கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போது, உக்ரைனுக்கு பிற நாடுகள் ஆயுத விநியோகம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்றும் படை வீரர்களுக்கு எந்தவித பயிற்சி அளிப்பதும், அவர்கள் தொடர்ந்து முன்னேறி செல்வதும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் புதின் கூறினார். ஆனால், இந்த தருணத்தில், ரஷியாவின் படைகள் எதிரி நாட்டின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளிலும் முன்னேறி விட்டது என சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் கோரி வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா மறைமுக உதவியை செய்து வருகிறது.