பழங்குடியின மக்களுக்காக அரசு எப்போதும் துணை நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Share

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம். சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர்.
அவர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு வந்துள்ளேன். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான். இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைக்கிற நாளில் அந்த விடுதியின் முன்புறம் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சென்னையில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக இருக்கும். எனவே சமூக நீதியை நிலை நாட்டுகிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.