மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி
Share
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்,வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துபோயினர். பின்னர் புனித் ராஜ்குமார் உடல் கண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின், கமல், சூர்யா, ராம் சரண், அல்லு அர்ஜுன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய நிலையில், படப்பிடிப்பு காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அந்தவகையில் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால், அவரால் புனித் ராஜ்குமார் இறுதிச்சடங்கின்போது பங்கேற்க முடியாமல் போனது. அதனால் இன்று (26.2.2022) நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் சாமதியில் அஞ்சலி செலுத்தினார். மாலை போட்டும், தீபாராதனை காட்டியும் அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தியது அவரது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.













