‘அனைவரும் வரவேற்கிறார்கள்; அரசு தடுக்கிறது’ -மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ராகுல்காந்தி டுவிட்
Share
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இன்று (ஜூன் 29) மணிப்பூர் சென்றார். எனினும், மணிப்பூரின் சுராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணுப்பூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் செல்ல கூடிய நிலையில், வழியில் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது என்றும் அவரை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் என போலீசார் கூறினர்.
காவல்துறை தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி இம்பால் நகருக்கு திரும்பினார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் என்றார்.
இதனை தொடர்ந்து, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்தார்.
இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களை ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். அந்த முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “அனைவரும் வரவேற்கிறார்கள். அரசு தடுக்கிறது” என்று கூறியுள்ளார்.













